Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லூக் - லூக் 15

லூக் 15:1-23

Help us?
Click on verse(s) to share them!
1எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
2அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
3அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
5கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
7அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
9கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
10அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
12அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
13சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
14எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
15அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
19இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
21குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
22அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.

Read லூக் 15லூக் 15
Compare லூக் 15:1-23லூக் 15:1-23