Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 2 இராஜாக்கள் - 2 இராஜாக்கள் 10

2 இராஜாக்கள் 10:7-27

Help us?
Click on verse(s) to share them!
7இந்த கடிதம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் மகன்களாகிய எழுபது பேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
8அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலம்வரை அவைகளை பட்டணத்து நுழைவாயிலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.
9மறுநாள் காலமே அவன் வெளியேவந்து நின்று, சகல மக்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் எஜமானுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லோரையும் கொன்றவன் யார்?
10ஆதலால் யெகோவா ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன யெகோவாவுடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; யெகோவா தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
11யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனிதர்களையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடி, யெகூ கொன்றுபோட்டான்.
12பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டு ரோமம் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்திற்கு வந்தபோது,
13யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.
14அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டு ரோமம் கத்தரிக்கிற கிணற்றின் அருகில் வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
15அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
16நீ என்னோடே கூடவந்து யேகோவாக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவனுடைய இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
17அவன் சமாரியாவுக்கு வந்தபோது, யெகோவா எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரும் அழியும்வரை கொன்றுபோட்டான்.
18பின்பு யெகூ மக்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
19இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரர்களையும், அவனுடைய சகல ஆசாரியர்களையும் என்னிடத்தில் வரவழையுங்கள்; ஒருவனும் விடுபடக்கூடாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரர்களை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாகச் செய்தான்.
20பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பு நாளை நியமியுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே நியமித்தார்கள்.
21யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினதால், பாகாலின் பணிவிடைக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததால் பாகாலின் கோவில் நான்குபுறமும் நிறைந்திருந்தது.
22அப்பொழுது அவன், ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரர்கள் அனைவருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்தான்.
23பின்பு யெகூ: ரேகாபின் மகனாகிய யோனதாபோடுகூடப் பாகாலின் கோவிலுக்குள் சென்று, பாகாலின் பணிவிடைக்காரர்களை நோக்கி: பாகாலின் ஊழியக்காரர்களைத் தவிர யெகோவாவின் ஊழியக்காரர்களில் ஒருவரும் இங்கே உங்களோடு இருக்காமல் கவனமாகப் பாருங்கள் என்றான்.
24அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனிதர்களில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
25சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ வீரர்களையும் அவர்களின் தலைவர்களையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் வீரர்களும் அவர்களின் தலைவர்களும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகாலின் கோவிலைச் சேர்ந்த இடமெங்கும் போய்,
26கோவிலின் சிலைகளை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
27சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கழிப்பிடமாக்கினார்கள்.

Read 2 இராஜாக்கள் 102 இராஜாக்கள் 10
Compare 2 இராஜாக்கள் 10:7-272 இராஜாக்கள் 10:7-27