Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 2 இராஜாக்கள்

2 இராஜாக்கள் 8

Help us?
Click on verse(s) to share them!
1எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; யெகோவா பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
2அந்தப் பெண் எழுந்து, தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தையின்படியே செய்து, தன் குடும்பத்தாரோடுகூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், ஏழுவருடங்கள் குடியிருந்தாள்.
3ஏழுவருடங்கள் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தைவிட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடுவதற்காகப் போனாள்.
4அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனிதனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாகச் சொல் என்றான்.
5இறந்துபோனவனை உயிரோடு எழுப்பினார் என்பதை அவன் ராஜாவிற்குச் சொல்லுகிறபோது, இதோ, அவன் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயாகிய அந்தப் பெண் வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவிடம் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த பெண்; எலிசா உயிரோடு எழுப்பின இவளுடைய மகன் இவன்தான் என்றான்.
6ராஜா அந்த பெண்ணைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரமாகச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவளுக்குரிய எல்லாவற்றையும், அவள் தேசத்தைவிட்டுப் போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கச் செய் என்றான்.
7சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனிதன் இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.
8ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனிதனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
9ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய மகன் என்னை உம்மிடத்திற்கு அனுப்பி, இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
10எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் யெகோவா எனக்குக் காண்பித்தார் என்றான்.
11பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான்.
12அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவனே, ஏன் அழுகிறீர் என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் மக்களுக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியால் அழுகிறேன்; நீ அவர்களுடைய கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்களுடைய வாலிபர்களைப் பட்டயத்தால் கொன்று, அவர்களுடைய குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிற்றைக் கிழித்துப்போடுவாய் என்றான்.
13அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் யெகோவா எனக்குத் தெரிவித்தார் என்றான்.
14இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் எஜமானிடத்திற்கு வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
15மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவனுடைய முகத்தின்மேல் விரித்தான்; அதனால் அவன் இறந்துபோனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாக ராஜாவானான்.
16இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருட ஆட்சியில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான்.
17அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
18அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

19யெகோவா: உன் மகன்களுக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னபடியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் அழிக்கவில்லை.
20அவனுடைய நாட்களில் யூதாவுடைய ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
21அதனாலே யோராம் சகல இரதங்களோடுங்கூட சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவர்களையும் தாக்கியபோது, மக்கள் தங்களுடைய கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
22அப்படியே யூதாவுடைய ஆளுகையின் கீழிருந்த ஏதோமியர்கள், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கலகம்செய்தார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.
23யோராமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அனைத்தும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
24யோராம் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுடன் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவனுடைய மகனாகிய அகசியா ராஜாவானான்.
25இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய பன்னிரண்டாம் வருட ஆட்சியிலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா ராஜாவானான்.
26அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே ஒரு வருடம் எருசலேமில் அரசாட்சி செய்தான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் மகளான அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள்.
27அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தம் கலந்திருந்தான்.
28அவன் ஆகாபின் மகனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போரிடப்போனான்; சீரியர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
29ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, சீரியர்கள் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்ப்பதற்குப் போனான்.