Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 2 இராஜாக்கள்

2 இராஜாக்கள் 14

Help us?
Click on verse(s) to share them!
1இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகனாகிய யோவாசுடைய இரண்டாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானான்.
2அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
3அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் அல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.
4மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம்காட்டி வந்தார்கள்.
5அரசாட்சி அவன் கையிலே உறுதிப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.
6ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலை செய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, யெகோவா கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை.
7அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.
8அப்பொழுது அமத்சியா யெகூவின் மகனாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் பிரதிநிதிகளை அனுப்பி: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.
9அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக திருமணம் செய்துகொடு என்று சொல்லச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே ஓடும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
10நீ ஏதோமியர்களை முறியடித்ததால் உன் இருதயம் உன்னைக் கர்வமடையச்செய்தது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படி, பொல்லாப்பை ஏன் வருவித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
11ஆனாலும் அமத்சியா கேட்காமல்போனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் திறமையைப் பார்க்கிறபோது,
12யூதா மக்கள் இஸ்ரவேலருக்கு முன்பாகத் தோற்று அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
13அகசியாவின் மகனாகிய யோவாசின் மகன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் மதிலிலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,
14யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த பொன் வெள்ளி அனைத்தையும், சகல பணிமுட்டுகளையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
15யோவாஸ் செய்த மற்ற செயல்பாடுகளும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு போர்செய்த விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
16யோவாஸ் இறந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய யெரொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
17இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்துவருடங்கள் உயிரோடிருந்தான்.
18அமத்சியாவின் மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

19எருசலேமிலே அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
20குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்.
21யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவனுடைய தகப்பனாகிய அமத்சியாவின் இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
22ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
23யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியாவின் பதினைந்தாம் வருடத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் மகன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்து,
24யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டுவிலகவில்லை.
25காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் மகன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்வரை உள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
26இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் யெகோவா பார்த்தார்.
27இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லாமல், யோவாசின் மகனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.
28யெரொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் போர்செய்து, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
29யெரொபெயாம் இறந்தபின், அவன் மகனாகிய சகரியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.