Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 2 இராஜாக்கள்

2 இராஜாக்கள் 24

Help us?
Click on verse(s) to share them!
1அவனுடைய நாட்களிலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருடங்கள் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
2அப்பொழுது யெகோவா கல்தேயர்களின் படைகளையும், சீரியர்களின் படைகளையும், மோவாபியர்களின் படைகளையும், அம்மோனியர்களின் படைகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக்கொண்டு யெகோவா சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிப்பதற்கு வரவிட்டார்.
3மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றும்படி யெகோவாவுடைய கட்டளையினால் அப்படி நடந்தது.
4அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் யெகோவா மன்னிக்க விருப்பமில்லாதிருந்தார்.
5யோயாக்கீமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
6யோயாக்கீம் இறந்தபின், அவனுடைய மகனாகிய யோயாக்கீன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
7எகிப்தின் ராஜா பின்பு தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவங்கி ஐப்பிராத்து நதிவரை எகிப்தின் ராஜாவிற்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.
8யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான்; எருசலேம் ஊரைச்சேர்ந்த எல்நாத்தானின் மகளான அவனுடைய தாயின் பெயர் நெகுஸ்தாள்.
9அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
10அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் வீரர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றுகையிடப்பட்டது.
11பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய வீரர்கள் நகரத்தை முற்றுகையிடும்போது அவனும் அதற்கு விரோதமாக வந்தான்.
12அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவனுடைய தாயும், ஊழியக்காரர்களும், பிரபுக்களும், அதிகாரிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருடத்திலே பிடித்துக்கொண்டான்.
13அங்கேயிருந்து யெகோவாவுடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் யெகோவா சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
14எருசலேமியர்கள் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பத்தாயிரம்பேரையும், சகல தச்சர்களையும் கொல்லர்களையும் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை மக்களைத் தவிர வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
15அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் பெண்களையும், அவன் அதிகாரிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
16இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனிதர்களாகிய ஏழாயிரம்பேரையும், தச்சர்களும் கொல்லர்களுமாகிய ஆயிரம்பேரையும், போர்செய்யத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
17அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவனுடைய சிறிய தகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக ஏற்படுத்தி, அவனுக்கு சிதேக்கியா என்று வேறுபெயரிட்டான்.
18சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோருவருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள்.

19யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
20எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.