15நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
16இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
17பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
18அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.
19அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
20நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
21நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
22இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
23பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
24சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
25அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
26மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.