Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 2 நாளாக

2 நாளாக 36

Help us?
Click on verse(s) to share them!
1அப்பொழுது மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பனுடைய இடத்திலே ராஜாவாக்கினார்கள்.
2யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
3அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான வரியைச் சுமத்தி,
4அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
5யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
6அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான்.
7யெகோவாவுடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளை பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
8யோயாக்கீமுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
9யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதங்களும் பத்து நாட்களும் எருசலேமில் அரசாண்டு, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்.
10அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், யெகோவாவுடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
11சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு,
12தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் யெகோவாவுடைய வார்த்தையைக் கூறிய எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.
13தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
14ஆசாரியர்களில் முக்கியமான அனைவரும் மற்றும் மக்களும் கூடி புறவகைகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்செய்து, யெகோவா எருசலேமிலே பரிசுத்தம்செய்த அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
15அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
16ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது.
17ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரச்செய்தார்; அவன் அவர்களுடைய வாலிபர்களை அவர்களின் பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தால் கொன்று, வாலிபர்களையும் கன்னிப்பெண்களையும் முதியோர்களையும் நரைமுடி உள்ளவர்களையும் விட்டுவிடவில்லை; எல்லோரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
18அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

19அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் மதிலை இடித்து, அதன் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த அழகான பொருட்களையெல்லாம் அழித்தார்கள்.
20பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா அரசாட்சி ஏற்படுத்தப்படும்வரை அங்கே அவர்கள் அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அடிமைகளாக இருந்தார்கள்.
21யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.
22எரேமியாவின் வாயினாலே யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேற, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
23அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.