Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 2 நாளாக

2 நாளாக 21

Help us?
Click on verse(s) to share them!
1யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான்.
2அவனுக்கு யோசபாத்தின் மகன்களாகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர்கள் இருந்தார்கள்; இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் மகன்கள்.
3அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் விலைமதிப்பான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் முதற்பிறந்தவனாக இருந்ததால், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்தான்.
4யோராம் தன் தகப்பனுடைய அரசாட்சிக்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர்கள் எல்லோரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.
5யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
6அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
7யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக தாவீதின் வம்சத்தை அழிக்க விருப்பமில்லாமல் இருந்தார்.
8அவனுடைய நாட்களில் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் கலகம்செய்து, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
9அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான்.
10ஆகிலும் யூதாவின் ஆளுகையின்கீழிருந்த ஏதோமியர்கள் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் செய்து பிரிந்தார்கள்; அவன் தன் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டதால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்செய்தார்கள்.
11அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிமக்களை வழிவிலகச்செய்து, யூதாவையும் அதற்குத் தூண்டிவிட்டான்.
12அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு கடிதம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய முற்பிதாவாகிய தாவீதின் தேவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடக்காமல்,
13இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் விபசார வழிக்கு ஒப்பாக யூதாவையும் எருசலேமின் குடிமக்களையும் விபசாரம் செய்ய வைத்து, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரர்களையும் கொன்றுபோட்டதால்,
14இதோ, யெகோவா உன் மக்களையும், பிள்ளைகளையும், மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையினால் வாதிப்பார்.
15நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் அழுகி விழும்வரை கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
16அப்படியே யெகோவா பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.
17அவர்கள் யூதாவில் வந்து, வலுக்கட்டாயமாகப் புகுந்து, ராஜாவின் அரண்மனையில் கிடைத்த அனைத்துப் பொருட்களையும், அவனுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவனுடைய இளைய மகனைத் தவிர வேறொரு மகனையும் அவனுக்கு மீதியாக விடவில்லை.
18இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு யெகோவா அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

19அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருடங்கள் முடிகிற காலத்தில் அவனுக்கு இருந்த கொடிய நோயினால் அவன் குடல்கள் சரிந்து இறந்துபோனான்; அவனுடைய முற்பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய மக்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
20அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.