Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லூக் - லூக் 1

லூக் 1:24-62

Help us?
Click on verse(s) to share them!
24அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
25எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
26எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
27தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
28அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
31இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
32அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான்.
34அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
35தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
36இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
37தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
38அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
39அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
40சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
44இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
45விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
48தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
49வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
50அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
51அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
52ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
54நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து,
55அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
56மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
57எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
58கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
59எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
60அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
61அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
62சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

Read லூக் 1லூக் 1
Compare லூக் 1:24-62லூக் 1:24-62