Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோவா - யோவா 11

யோவா 11:32-55

Help us?
Click on verse(s) to share them!
32இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.
33அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
34அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
35இயேசு கண்ணீர் விட்டார்.
36அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
37அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
38அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
39இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
40இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
41அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
42நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார்.
43இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.
44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
45அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
46அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
47அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
48நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
49அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
50மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
51இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
52அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
53அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
54ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
55யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.

Read யோவா 11யோவா 11
Compare யோவா 11:32-55யோவா 11:32-55