Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - உபா

உபா 17

Help us?
Click on verse(s) to share them!
1“பழுதும் அவலட்சணமுமான யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பாக இருக்கும்.
2“உன் தேவனாகிய யெகோவாவின் கண்களுக்கு முன்பாக எந்த ஆணாவது பெண்ணாவது உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமம்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,
3நான் விலக்கியிருக்கிற வேறே தெய்வங்களையாவது, சந்திரன் சூரியன் முதலான வானசேனைகளையாவது பணிந்து, அவைகளை வணங்குகிறதாகக் காணப்பட்டால்,
4அது உன் காதுகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாக விசாரிக்கவேண்டும்; அது உண்மையென்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் காண்பாயானால்,
5அந்த அக்கிரமத்தைச்செய்த ஆணையும் பெண்ணையும் உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறிவாயாக.
6சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவனைக் கொலைசெய்யக்கூடாது.
7அவனைக் கொலை செய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா மக்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
8“உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக்குறித்தும், உரிமைகளைக்குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும், வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு கடினமாக இருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய யெகோவா தெரிந்தெடுத்த இடத்திற்குப்போய்,
9லேவியர்களான ஆசாரியர்களிடத்திலும், அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதிகளிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.
10யெகோவா தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்குக் கட்டளையிடுகிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.
11அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
12அங்கே உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் பிடிவாதம் செய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.
13அப்பொழுது மக்கள் எல்லோரும் அதைக் கேட்டு, பயந்து, இனி பிடிவாதம் செய்யாமலிருப்பார்கள்.
14“உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல மக்களையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;
15உன் தேவனாகிய யெகோவா தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரர்களுக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.
16அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
17அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.
18அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்கள்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,

19இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வதற்கு,
20அவன் லேவியர்களாகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண புத்தகத்தைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் உயிருள்ள நாட்களெல்லாம் அதை வாசிக்கவேண்டும்; இப்படிச் செய்வதினால், தானும் தன் மகன்களும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்ஜியத்திலே நீடித்து வாழ்வார்கள்.