Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - உபா

உபா 24

Help us?
Click on verse(s) to share them!
1“ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டபின்பு, அவளிடத்தில் வெட்கக்கேடான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.
2அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
3அந்த இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும்,
4அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே.
5“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக.
6“மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்.
7“தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
8“தொழுநோயைக்குறித்து லேவியர்களாகிய ஆசாரியர்கள் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
9நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
10“பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.
11வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.
12அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல்,
13அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.
14“உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.
15அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
16“பிள்ளைகளுக்காகப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
17“நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் உடையை அடகாக வாங்காமலும் இருந்து,
18நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

19“நீ உன் பயிரை அறுக்கும்போது உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாக வைத்து வந்தாயானால், அதை எடுத்துவர திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்காக, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
20நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே விடுபட்டதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக;
21நீ உன் திராட்சைப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
22நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.