Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா

1 இராஜா 15

Help us?
Click on verse(s) to share them!
1நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
2மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
3தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.
4ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
5தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
6ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
7அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
8அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
9இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
1041 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
11ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
12அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
13தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.
14மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது.
15தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.
16ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
17ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
18அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:

19எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.
20பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான்.
21பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.
22அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
23ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.
24ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
25யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான்.
26அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
27இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
28பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
29அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
30அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
31நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
32ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
33யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு,
34யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.