Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - புலம்

புலம் 2

Help us?
Click on verse(s) to share them!
1ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார்.
2ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
3அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார்.
4பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.
5ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.
6தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்; யெகோவா சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து, தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.
7ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரண்மனைகளின் மதில்களை விரோதியின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம் செய்கிறதுபோல் யெகோவாவின் ஆலயத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
8யெகோவா, மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.
9எருசலேம் பட்டணத்து வாசல்கள் தரையில் புதைந்துகிடக்கிறது; அவளுடைய தாழ்ப்பாள்களை உடைத்துப்போட்டார்; அவளுடைய ராஜாவும் அவளுடைய பிரபுக்களும் அந்நியமக்களுக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக் யெகோவாவால் தரிசனம் கிடைப்பதில்லை.
10மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
11என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது; குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள்.
12அவர்கள் காயப்பட்டவர்களைப்போல பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.
13மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
14உன் தீர்க்கதரிசிகள் பொய்யும் பயனற்ற தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன்னுடைய சிறையிருப்பு விலகும்படி உன் அக்கிரமத்தை சுட்டிக்காட்டாமல், பொய்யானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.
15வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
16உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
17யெகோவா தாம் நினைத்ததைச் செய்தார்; ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைவன் மகிழ்ச்சியடையச் செய்தார்; உன் எதிரிகளின் கொம்பை உயர்த்தினார்.
18அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.

19எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
20யெகோவாவே, யாருக்கு இந்த விதமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; பெண்கள், கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பத்தின் பிள்ளைகளை சாப்பிடவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
21வாலிபனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
22பண்டிகைநாளில் மக்கள் கூட்டத்தை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்கு பயத்தை வரவழைத்தீர்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைவன் அழித்தான்.