Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சகரி

சகரி 14

Help us?
Click on verse(s) to share them!
1இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
2எருசலேமிற்கு விரோதமாக போரிடச் சகல தேசங்களையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; பெண்கள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனிதர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்படுவதில்லை.
3யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார்.
4அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
5அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.
6அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும்.
7ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
8அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும்.
9அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
10தேசமெல்லாம் கேபாதுவங்கி எருசலேமிற்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாக மாற்றப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் இடத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற இடம்வரை, கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள்வரை குடியேற்றப்பட்டிருக்கும்.
11அதிலே மக்கள் வாசம்செய்வார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாகத் தங்கியிருக்கும்.
12எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
13அந்நாளிலே யெகோவால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
14யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும்.
15அந்த முகாம்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.
16பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக, வருடாவருடம் வருவார்கள்.
17அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை பெய்வதில்லை.
18எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமல் சேராமலும்போனால் அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் யெகோவா வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.

19இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை.
20அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
21அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே எந்தவொரு கானானியனும் இருப்பதில்லை.