Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - எசேக்

எசேக் 26

Help us?
Click on verse(s) to share them!
1பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
3யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன்.
4அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் மதில்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இல்லாமல் விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
5அது வலைகளை விரிக்கிற இடமாக கடலின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அது தேசங்களுக்குக் கொள்ளையாகும்.
6வெளியில் இருக்கிற அதின் மகள்களோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
7யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன்.
8அவன் வெளியில் இருக்கிற உன்னுடைய மகள்களை வாளினால் கொன்று, உனக்கு விரோதமாக மதில்களைக் கட்டி அணைபோட்டு, கேடயங்களை எடுத்து,
9உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான்.
10அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும்.
11தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
12அவர்கள் உன்னுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடி, மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன்னுடைய கல்லுகளையும், மரங்களையும், மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.
13உன்னுடைய பாட்டுகளின் சத்தத்தை ஓயச்செய்வேன்; உன்னுடைய சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
14உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற இடமாக இருப்பாய்; இனிக் கட்டப்படமாட்டாய்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
16கடலரசர் எல்லோரும் தங்களுடைய சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்களுடைய சால்வைகளைக் கழற்றி, தங்களுடைய சித்திரத்தையலாடைகளை கழற்றிப்போடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து, உனக்காக வியப்படைவார்கள்.
17அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,
18நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது கடலில் உள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.

19யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாக நான் உன்மேல் கடலை வரச்செய்யும்போதும்,
20ஆரம்பகாலத்தின் மக்களின் அருகில் குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னை இறங்கச்செய்வேன்; நீ குடியேறாமலிருக்க ஆரம்பகாலம் முதற்கொண்டு பாழாய் இருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னைத் தங்கியிருக்கச்செய்வேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.
21உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.