16அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார்.
17அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான்.
18உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
19பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாட்கள் இருந்து,
20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான்.
21கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இயேசுவின் நாமத்தை ஆராதிக்கின்றவர்களை துன்புறுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கைதுசெய்து பிரதான ஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
22சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று தொடர்ந்துப் பேசி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்.
23சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.
24அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.