Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - ஓசியா

ஓசியா 2

Help us?
Click on verse(s) to share them!
1உங்கள் சகோதரர்களைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள்.
2உங்கள் தாயுடன் வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் தன் விபச்சாரச்செயலை தன் முகத்திலிருந்தும், தன் விபசாரங்களைத் தன் இருப்பிடத்தின் நடுவிலிருந்தும் விலக்கிப்போடவேண்டும்.
3இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்கி, அவள் பிறந்தநாளில் இருந்ததுபோல அவளை நிறுத்தி, அவளை வெட்டவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகச்செய்வேன்;
4அவளுடைய பிள்ளைகள் விபச்சாரப்பிள்ளைகளானதால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன்.
5அவர்களுடைய தாய் விபச்சாரம்செய்தாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இழிவான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுரோமத்தையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நாயகர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.
6ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.
7அவள் தன் நாயகர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின கணவனிடத்திற்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள்.
8தனக்கு நான் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகச்செய்தவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக மாற்றினார்கள்.
9ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சைரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுரோமத்தையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன்.
10இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை.
11அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியச்செய்வேன்.
12என் நேசர்கள் எனக்குக் கொடுத்த கூலி என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சைச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாக்கிப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைச் சாப்பிடும்.
13அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களுக்காக அவளை விசாரிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
14ஆனாலும், இதோ, நான் அவளுக்கு ஆசைகாட்டி, அவளை வனாந்திரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளுடன் ஆதரவாகப் பேசி,
15அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோர் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
16அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று யெகோவா உரைக்கிறார்.
17பாகால்களுடைய பெயர்களை அவள் வாயிலிருந்து அகற்றிப்போடுவேன்; இனி அவைகளின் பெயரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைவும் இல்லாமற்போகும்.
18அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களுடனும், ஆகாயத்துப் பறவைகளுடனும், பூமியிலே ஊரும் பிராணிகளுடனும், ஒரு உடன்படிக்கைசெய்து, வில்லையும் பட்டயத்தையும் போரையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாகப் படுத்துக்கொண்டிருக்கச்செய்வேன்.

19நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.
20உண்மையாகவே உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ யெகோவாவை அறிந்துகொள்வாய்.
21அக்காலத்தில் நான் பதில் கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு பதில் கொடுப்பேன், அவைகள் பூமிக்கு பதில் கொடுக்கும்.
22பூமி தானியத்திற்கும், திராட்சைரசத்திற்கும், எண்ணெய்க்கும் பதில்கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் பதில் கொடுக்கும்.
23நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் மக்களல்லாதிருந்தவர்களை நோக்கி: நீ என் மக்களென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.