11இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான்.
12பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை;
13இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ?
14மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள்.
15அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.
16பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் யெகோவாவுடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
17உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய 250 தூபகலசங்களையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள்” என்றான்.