Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லூக் - லூக் 23

லூக் 23:3-24

Help us?
Click on verse(s) to share them!
3பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
6கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
7அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
9அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
11அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
13பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
14அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
19அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
22அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,

Read லூக் 23லூக் 23
Compare லூக் 23:3-24லூக் 23:3-24