7அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
8நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
9அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
10அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
11அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
12உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
13அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
14யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
15காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
16அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
17இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.