10உங்களுடைய மகிழ்ச்சியின் நாட்களிலும், உங்களுடைய பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது எக்காளங்களை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்களுடைய தேவனுடைய சமூகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா” என்றார்.
11இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பியது.
12அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் சீனாய் வனாந்திரத்திலிருந்து தங்களுடைய பயண வரிசைகளின்படி புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்திரத்தில் தங்கிற்று.
13இப்படியே யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பயணம் செய்தார்கள்.
14யூதா சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு முதல் புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவனாக இருந்தான்.
15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.
16செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான்.