32யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனம் மாறினார்கள்; இதோ, யோனாவைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் நினிவே பட்டணத்தார் இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
33ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவாகவோ, பாத்திரத்தின் கீழேயோ வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
34கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும்.
35எனவே உனக்குள் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாக இரு.
36உன் சரீரத்தின் எந்தவொரு பகுதியும் இருளடையாமல், சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்றார்.
37இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார்.
38அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான்.