15நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
16இந்தத் தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறு ஆடுகளும் எனக்கு இருக்கிறது; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனுமாகும்.
17நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார்.
18ஒருவனும் அதை என்னிடத்தில் இருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, அதை மீண்டும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
19இந்த வசனங்களினால் யூதர்களுக்குள்ளே மீண்டும் பிரிவினை உண்டானது.
20அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.
21வேறுசிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்கள் இல்லை. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.
22பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டை பண்டிகை வந்தது; குளிர்காலமுமாக இருந்தது.
23இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே நடந்துகொண்டிருந்தார்.
24அப்பொழுது யூதர்கள் அவரை சூழ்ந்துகொண்டு: எவ்வளவு காலம்வரைக்கும் எங்களுடைய ஆத்துமாவிற்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாக சொல்லும் என்றார்கள்.
25இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற செயல்களே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
26ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாக இல்லாததினால் விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
27என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.
28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை.
29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.