Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோபு

யோபு 2

Help us?
Click on verse(s) to share them!
1பின்னொருநாளிலே தேவபுத்திரர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றான்.
2யெகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
3அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனிதனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை தூண்டினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாக நிற்கிறான் என்றார்.
4சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் உயிருக்குப் பதிலாகத் தனக்கு இருந்த எல்லாவற்றையும், மனிதன் கொடுத்துவிடுவான்.
5ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவனுடைய எலும்பையும் அவனுடைய உடலையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்திற்கு முன்பாக உம்மை நிந்திக்கமாட்டானோ பாரும் என்றான்.
6அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார்.
7அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.
8அவன் ஒரு உடைந்த ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் அமர்ந்தான்.
9அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள்.
10அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை.
11யோபுவின் மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு சம்பவித்த தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதாபப்படவும், அவனுக்கு ஆறுதல் சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை செய்துகொண்டு, அவரவர் தங்கள் இடங்களிலிருந்து வந்தார்கள்.
12அவர்கள் தூரத்தில் வரும்போது தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் அங்கியைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டுவந்து,
13அவனுடைய துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனுடன் ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவு பகல் ஏழு நாட்கள், அவனுடன் தரையில் அமர்ந்திருந்தார்கள்.