1தாவீதின் நன்றிப்பாடல். ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
2நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
3யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
4தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
6மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
7அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
8யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
9யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
10யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
11மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
12உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
13உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
14யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
15எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.