13அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.
14அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.
15அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.
16மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
17அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று:
18பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.
19பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.
20நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
21அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.
22அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.
23அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.
24மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.
25பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.
26பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.
27அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,