Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 22

1 இராஜா 22:21-40

Help us?
Click on verse(s) to share them!
21அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.
22எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார்.
23ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
24அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான்.
25அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
26அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய்,
27இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
28அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான்.
29பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
30இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான்.
31சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
32எனவே, இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் காணும்போது, இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்செய்ய அவனுக்கு நேராக வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.
33இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள்.
34ஒருவன் தெரியாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன்னுடைய ரத ஓட்டியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு மறுபுறம் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
35அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
36பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது.
37அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்.
38அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது.
39ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
40ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Read 1 இராஜா 221 இராஜா 22
Compare 1 இராஜா 22:21-401 இராஜா 22:21-40