7பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8அநீதியுள்ள அந்த நிர்வாகி புத்தியாகச் செய்தான் என்று எஜமான் பார்த்து அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாக ஒளியின் மக்களைவிட இந்த உலகத்தின் மக்கள் தங்களுடைய சந்ததியில் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள்.
9நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மரிக்கும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவோர் உண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதியுங்கள்.
10கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாக இருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாக இருக்கிறான்.
11அநீதியான உலகப்பொருளில் நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடம் நேர்மையான சொத்தை ஒப்புவிப்பார்கள்?
12வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால், உங்களுக்கு ஏதாவதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
13எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிவிடை செய்யமுடியாது; ஒருவனைப் பகைத்து மற்றவனை நேசிப்பான், அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களாலே கூடாது என்றார்.
14இவைகளையெல்லாம் பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர்களும் கேட்டு, அவரைப் பரிகாசம்பண்ணினார்கள்.
15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.