Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - யோசு - யோசு 10

யோசு 10:11-28

Help us?
Click on verse(s) to share them!
11அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கல்மழைகளை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
12யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான்.
13அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.
14இப்படிக் யெகோவா ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
15பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
16அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள்.
17ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது.
18அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள்.
19நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
20யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் அவர்களை மகா பயங்கரமாக அவர்கள் முழுவதும் அழியும்வரைக்கும் தாக்கினார்கள்; அவர்களில் மீதியானவர்கள் பாதுகாப்பான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
21மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
22அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
23அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
24அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
25அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான்.
26அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.
27சூரியன் மறைகிற நேரத்திலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையிலே அவர்களைப் போட்டு; இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் குகையின் வாயிலே அடைத்தார்கள்.
28அந்த நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயத்தினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனிதர்களையும் எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.

Read யோசு 10யோசு 10
Compare யோசு 10:11-28யோசு 10:11-28