3ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்;
4கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள்.
5அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
6அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,
7மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
8நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார்.
9பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது.
10எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
11நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி,
12அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்;
13நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
14பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
15மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
16கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார்.
17அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.