9தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.
10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், உன்னுடைய பெலன் குறுகினது.
11மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் விடுவிக்க முடிந்தால் விடுவி.
12அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ?
13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
15துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
16நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
17உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
18யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
20துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
21என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரர்களோடு சேராதே.
22திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?
23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.
24துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.
25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
27வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
28நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.