1(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.) என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
3இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.
4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள்.
6நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து:
8யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.
9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர்.
10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.