20பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் மக்கள் நடுவில் நானே உன்னுடைய பங்கும் உன்னுடைய சுதந்தரமுமாக இருக்கிறேன்.
21“இதோ, லேவியின் சந்ததி ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
22இஸ்ரவேல் மக்கள் குற்றஞ்சுமந்து சாகாதபடி, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் அருகில் வராமலிருக்க வேண்டும்.
23லேவியர்கள் மட்டும் ஆசரிப்புக் கூடாரத்தைச்சேர்ந்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் மக்கள் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக இருக்கும்.
24இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் மக்களின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன்” என்றார்.
25பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
26“நீ லேவியரோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்கள் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
27நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.