Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - அப் - அப் 7

அப் 7:5-55

Help us?
Click on verse(s) to share them!
5இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
6அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
7அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
8மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
9அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
10தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
11பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
12அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
13இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
14பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
15அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
16அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
17ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
18யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
19அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
20அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
21அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
22மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
23அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
24அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
25தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
26மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
27ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
28நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
29இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
30நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
31மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
32நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
33பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
34எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
35உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
36இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
37இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
38சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
39இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
40ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
41அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
42அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
43பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
44மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
45மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
46இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
47சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
48ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
49வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
50இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
51“வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
52தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
53தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
54இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
55அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:

Read அப் 7அப் 7
Compare அப் 7:5-55அப் 7:5-55