12பலிபீடத்தின்மேலிருக்கிற நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டு எரிக்கக்கடவன்.
13பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது.
14“உணவுபலியின் விதிமுறைகள் என்னவென்றால், ஆரோனின் மகன்கள் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்திற்கு முன்னே படைக்கவேண்டும்.
15அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.
16அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும்.
17அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலவும் குற்றநிவாரணபலியைப் போலவும் மகா பரிசுத்தமானது.
18ஆரோனின் சந்ததியில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; யெகோவாவுக்கு செலுத்தப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாக இருப்பான்” என்று சொல் என்றார்.