21ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
22வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம்.
23பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
24“அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
25அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
26விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
27நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
28அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
29“தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.