Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லூக் - லூக் 23

லூக் 23:17-53

Help us?
Click on verse(s) to share them!
17பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
19அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
22அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
26அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
27திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
28இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
32குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
35மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
38இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
40மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
45சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
47நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
50யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
51அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
52அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
53அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.

Read லூக் 23லூக் 23
Compare லூக் 23:17-53லூக் 23:17-53