16அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
17இஸ்ரவேல் மக்கள் பிரயாணம்செய்யும்போது, மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பேரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள்.
18சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் அவர்களைத் தாக்கவில்லை; ஆனாலும் சபையார்கள் எல்லோரும் பிரபுக்களுக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.
19அப்பொழுது எல்லா பிரபுக்களும், சபையார்கள் அனைவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தில் அவர்களுக்கு வாக்குக்கொடுத்தோம்; ஆகவே அவர்களை நாம் தொடக்கூடாது.
20கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படி நாம் அவர்களை உயிரோடு வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம்.
21பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.
22பின்பு யோசுவா அவர்களை அழைத்து: நீங்கள் எங்கள் நடுவில் குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாக இருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை ஏமாற்றியது ஏன்?
23இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.
24அவர்கள் யோசுவாவுக்கு மறுமொழியாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய யெகோவா தமது ஊழியக்காரனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியார்களுக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்களுடைய ஜீவனுக்காக உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம்.
25இப்போதும், இதோ, உமது கைகளில் இருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாகத் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள்.
26அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் மக்கள் அவர்களைக் கொன்றுபோடாதபடி, அவர்களை இவர்கள் கைகளிலிருந்து தப்புவித்தான்.