33அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
34அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள்.
35அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.
36பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
37“நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.
38தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்” என்றார்.
39அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
40ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
41மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள்.
42சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது.