1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. மணவாளி
2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக: உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
3உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
5எருசலேமின் பெண்களே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.