9இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
10அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
11மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
12சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
13அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
14அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
15அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
17மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.