15அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
16நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
17மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
18அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
19யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
20இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
21அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.