Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 2

1 இராஜா 2:13-35

Help us?
Click on verse(s) to share them!
13ஆகீத்தின் மகனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் வந்தான். நீ சமாதானமாக வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாகத்தான் வருகிறேன் என்றான்.
14பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
15அப்பொழுது அவன்: ராஜ்ஜியம் என்னுடையதாக இருந்தது என்றும், நான் அரசாளுவதற்கு இஸ்ரவேலர்கள் எல்லோரும் என்னை எதிர்பார்த்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் அரசாட்சி என்னைவிட்டுத் தாண்டி, என்னுடைய சகோதரனுடையதானது; யெகோவாவால் அது அவருக்குக் கிடைத்தது.
16இப்பொழுது நான் உம்மிடம் ஒரு விண்ணப்பத்தைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.
17அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை எனக்கு அவர் திருமணம் செய்துகொடுக்க, அவரோடு பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.
18அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள்.
19பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடம் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்து, அவளுக்கு எதிரேவந்து அவளை வணங்கி, தன்னுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன்னுடைய வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு இருக்கையை வைத்தான்.
20அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என்னுடைய தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
21அப்பொழுது அவள்: சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்குத் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்றாள்.
22ராஜாவாகிய சாலொமோன் தன்னுடைய தாயாருக்கு மறுமொழியாக: நீர் சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை அதோனியாவுக்கு ஏன் கேட்கிறாய்? அப்படியானால் ராஜ்ஜியபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் மகன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.
23பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன்னுடைய உயிருக்குச் சேதம் உண்டாக்கும்படிச் சொல்லாமலிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யட்டும் என்று யெகோவா மேல் ஆணையிட்டு,
24இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலை செய்யப்படுவான் என்று என்னை உறுதிப்படுத்தினவரும், என்னை என்னுடைய தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கச்செய்து, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டினவருமாகிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
25ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்; பெனாயா அதோனியாவைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுபோட்டான்.
26ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன்னுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குரியவனாக இருந்தும், நீ என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் யெகோவாவாகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்ததாலும், என்னுடைய தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்ததாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.
27அப்படியே யெகோவா சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் யெகோவாவுடைய ஆசாரியனாக இல்லாதபடித் தள்ளிப்போட்டான்.
28நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் யெகோவாவுடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பக்கம் சாயாதவனாக இருந்தும், அதோனியாவின் பக்கம் சாய்ந்திருந்தான்.
29யோவாப் யெகோவாவின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தின் அருகில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் மகனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனைக் கொலைசெய் என்றான்.
30பெனாயா யெகோவாவின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவிடம் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு பதில் கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.
31அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்செய்து, இவ்விதமாக யோவாப் காரணமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என்னுடைய தகப்பன் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.
32அவன் தன்னைவிட நீதியும் நற்குணமும் உள்ள இரண்டு பேர்களாகிய நேரின் மகன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவனையும், ஏத்தேரின் மகன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவனையும் தாக்கி, என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் யெகோவா அவனுடைய தலையின்மேல் திரும்பச்செய்வாராக.
33இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் யெகோவாவாலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.
34அப்படியே யோய்தாவின் மகன் பெனாயா போய், அவனைத் தாக்கி அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்திரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம் செய்யப்பட்டான்.
35அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.

Read 1 இராஜா 21 இராஜா 2
Compare 1 இராஜா 2:13-351 இராஜா 2:13-35