2இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
3பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
6கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
7அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
9அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.