4அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள்.
5நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
6அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம்.
7அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
8நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; யெகோவாவுடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
9அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே, ஆயீக்கு மேற்கில் ஒளிந்திருந்தார்கள்; யோசுவா அன்று இரவு மக்களுடன் தங்கினான்.
10அதிகாலையில் யோசுவா எழுந்திருந்து, மக்களை எண்ணிப்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பர்களோடு மக்களுக்கு முன்பே நடந்து, ஆயீயின் மேல் படையெடுத்தான்.
11அவனோடு இருந்த யுத்த மக்கள் எல்லோரும் நடந்து, பட்டணத்திற்கு அருகே வந்துசேர்ந்து, ஆயீக்கு வடக்கே முகாமிட்டார்கள்; அவர்களுக்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களை பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவே பட்டணத்திற்குமேலே இரகசியப்படையாக வைத்தான்.
13பட்டணத்திற்கு வடக்கே இருந்த எல்லா சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே ஒளிந்திருக்கிறவர்களையும் ஒழுங்குசெய்தபின்பு, யோசுவா அன்று இரவு பள்ளத்தாக்கிற்குப் போயிருந்தான்.
14ஆயீயின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனிதர்களாகிய அவனுடைய எல்லா மக்களும் துரிதப்பட்டு, அதிகாலையிலே குறித்த வேளையில் இஸ்ரவேலர்களுக்கு எதிரே யுத்தம்செய்ய சமவெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்திற்குப் பின்னாலே தன்னைத் தாக்குவதற்காக இரகசியப்படை வைக்கப்பட்டிருக்கிறதை அவன் அறியாமலிருந்தான்.
15யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்திரத்திற்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
16அப்பொழுது பட்டணத்திற்குள் இருந்த மக்கள் எல்லோரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள்.
17ஆயீயிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.