2யெகோவா யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரர்களையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
3யுத்தமனிதர்களாகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தை ஒருமுறை சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாட்கள் சுற்றிவரவேண்டும்.
4ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவாருங்கள்; ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதவேண்டும்.
5அவர்கள் அந்தக் கொம்புகளினால் நீண்ட சப்தம் எழுப்பும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், மக்கள் எல்லோரும் மகா சத்தத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும்; அப்பொழுது பட்டணத்தின் மதில் இடிந்துவிழும்; உடனே மக்கள் அவரவர்கள் தங்களுக்கு நேராக ஏறிப்போகவேண்டும் என்றார்.
6அந்தப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
7மக்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்த வீரர்கள் யெகோவாவின் பெட்டிக்குமுன்னே நடக்கவேண்டும் என்றான்.
8யோசுவா மக்களிடம் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர்கள் யெகோவாவுக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்னே சென்றது.
9எக்காளங்களை ஊதுகிற ஆசாரியர்களுக்கு முன்னே யுத்த வீரர்கள் நடந்தார்கள்; பின்புறம் உள்ள வீரர்கள், எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்னே சென்றார்கள்.
10யோசுவா மக்களை நோக்கி: நான் சொல்லும் நாள் வரைக்கும், நீங்கள் ஆர்ப்பரிக்காமலும் உங்கள் வாயினால் சத்தம் போடாமலும் இருங்கள்; உங்களுடைய வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளில் ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.