10பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்கு விருப்பம் இல்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இந்தவிதமாக உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவித்தேன்.
11பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன்.
12எமோரியர்களின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்களுடைய வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னிருந்து துரத்திவிட்டது.
13அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சைத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புக்களின் பலனையும் சாப்பிடுகிறீர்கள் என்றார்.
14ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள்.
15யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.
16அப்பொழுது மக்கள் மறுமொழியாக: வேறு தெய்வங்களைத் தொழுதுகொள்ளும்படி, யெகோவாவை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாக இருப்பதாக.