2உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
3கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.
4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?
5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
6நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.
8தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.
9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
10உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன்.