17ஆசாரியனும் ஆயுதம் அணிந்தவர்களாகிய 600 பேரும் வாசற்படியிலே நிற்க்கும்போது, தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த 5 மனிதர்கள் உள்ளே புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.
18அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.
19அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன்னுடைய வாயை மூடிக்கொண்டு, எங்களோடு வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒருவனுடைய வீட்டிற்கு மட்டும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
20அப்பொழுது ஆசாரியனுடைய மனது மகிழ்ச்சியடைந்து, அவன் ஏபோத்தையும் உருவங்களையும் செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, மக்களிடம் போனான்.
21அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.
22அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் கோத்திரத்தார்களை பின்தொடர்ந்துவந்து,
23அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள்.
24அதற்கு அவன்: நான் உண்டாக்கின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டு போகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான்.
25தாண் மக்கள் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்க சத்தமிடாதே, சத்தமிட்டால் கடுங்கோபக்காரர்கள் உங்களைத் தாக்குவார்கள்; அப்பொழுது நீயும் உன்னுடைய குடும்பத்தினர்களும் கொல்லப்படுவார்கள் என்று சொல்லி,
26தங்களுடைய வழியிலே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று மீகா பார்த்து, அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான்.